எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு புதிய இளம் வீராங்கனைகள் பலரை அணியில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள் தீர்மானித்ததாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.
‘எதிர்காலத்தில் அதிசிறந்த வீராங்கனைகளை உருவாக்கி தேசிய அணியைக் கட்டி எழுப்புவதே தேர்வாளர்களினதும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் குறிக்கோள் எனவும் இந்தியாவுக்கு புறுப்படுவதற்கு முன்னர் சமரி தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக ஐந்து மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை மகளிர் அணியினர் இன்று அதிகாலை இந்தியா பயணமாகினர்.
நடப்பு உலக சம்பியன் இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் இலகுவானதல்ல. புதிய வீராங்கனைகள் பலர் அணியில் இடம்பெறுகின்றனர். அவர்களுக்கு சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இந்த தொடர் அமையவுள்ளது. எமது வீராங்கனைகள் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள் என நான் கருதுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் எங்களுக்கு சிறிது காலம் ஓய்வு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் சில போட்டிகளிலும் விளையாடினோம். துரதிர்ஷ்டவசமாக நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் பயிற்சிகளில் சிறு தடை ஏற்பட்டது’ என சமரி அத்தபத்து மேலும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 21, 23, 26ஆம் திகதிகளிலும் கடைசி இரண்டு போட்டிகள் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 28, 30ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.
இலங்கை மகளிர் குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷித்தா சமரவிக்ரம (உப தலைவி), ஹசினி பெரேரா, விஷ்மி குணரட்ன, நிலக்ஷிக்கா டி சில்வா, கவிஷா டில்ஹாரி, இமேஷா துலானி, கௌஷினி நுத்யங்கனா, மல்ஷா ஷெஹானி, இனோக்கா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, நிமேஷா மதுஷானி, காவியா காவிந்தி, ரஷ்மிக்கா செவ்வந்தி, மல்கி மதாரா.