முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர், 30,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனையிடல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் ஒப்பந்தத்தை குறித்த தொழிலதிபர் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன்படி, 2026 மார்ச் மாதத்திற்காக அவருக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு காசோலையை (Cheque) விடுவிப்பதற்காக, வைத்தியசாலை அதிகாரிகளால் 30,000 ரூபாய் லஞ்சம் கோரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்கு பிரிவில் வைத்து, லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது பின்வரும் இரு அதிகாரிகளும் சனிக்கிழமை (18) அன்று கைது செய்யப்பட்டனர்:
சண்முகராசா பிரதீபன் (கணக்காளர்)
காசிப்பிள்ளை காந்தீபன் (மேலாண்மை உதவியாளர்)
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.