சென்னை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் வெற்றியை எதிர்த்து வழக்கு:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். இதேபோல, திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுகவின் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
4 வார கால அவகாசம் நிராகரிப்பு:
இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், “இந்தத் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். எனவே, விசாரணையை 4 வாரத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும்,” எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், 4 வார கால அவகாசத்தை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதற்குள் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவை விஜய் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கு தள்ளிவைப்பு:
இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஆர்.சிவராஜ் என்பவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கையும் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
#ChiefMinisterVijay #ThalapathyVijay #Perambur #TVKGovernment #MadrasHighCourt #ElectionPetition #RDSekar #AadhavArjuna #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates