கொழும்பில் வசிக்கும் ரகுநாதன் – லக்ஷ்மி தம்பதியரின் 6 வயது மகன் ஜெய்ஹரி, நீச்சலில் புதிய உலக சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் கொழும்பு சென். பெனடிக்ட் கல்லூரியில் முதலாம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.
நீச்சலில் சிறுவனுக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்டறிந்த பெற்றோர், அவரை ஊக்குவித்து பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர். இதன்படி, சென். பெனடிக்ட் கல்லூரியின் ‘பென்ஸ் அகுவாட்டிக்ஸ்’ நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஜெய்ஹரி, குறிப்பாக ‘பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் சிறப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்த நீச்சல் பயிற்றுநர் கசுன் வர்ணக டி சில்வாவின் வழிகாட்டுதலுடன் தீவிர பயிற்சி மேற்கொண்ட ஜெய்ஹரியின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, உலக சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
செப்டம்பர் 30ஆம் திகதி சென். பெனடிக்ட் கல்லூரி நீச்சல் தடாகத்தில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் இந்த முயற்சி நடைபெற்றது.
இதன்போது, 50 மீற்றர் தூரத்தை ‘பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் 1 நிமிடம் 2 விநாடிகளில் கடந்து ஜெய்ஹரி சாதனை படைத்தார். முயற்சியைப் பரிசீலித்த நடுவர்கள், அது உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெய்ஹரிக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் உள்ளிட்ட கௌரவங்கள் வழங்கப்பட்டன.
6 வயதிலேயே நீச்சலில் உலக சாதனை படைத்துள்ள ஜெய்ஹரியின் இந்தச் சாதனை, அவரது பெற்றோர், பயிற்றுநர்கள் மற்றும் சென். பெனடிக்ட் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இளம் தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.