இப்பலோகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கயான் அதிகாரிய உள்ளிட்ட குழுவினர் நடத்திய தாக்குதலில் தம்பதியினர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பலோகம, அலுத்புலியங்குளம், விஜிதபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர்.
ஹிரிபிட்டியாகம விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இப்பலோகம பிரதேச சபை புத்தாண்டு விழாவின் போது, குறித்த உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான தம்பதியினர் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் பெண்ணின் காதுப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கணவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு தலை மற்றும் கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் இப்பலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.