நான் எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருடனுடனும் தொலைபேசியில் கதைக்கவுமில்லை தொடர்பில் இருக்கவுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவருடன் தான் 53 தடவைகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப் பொருள் கடத்தல் காரர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் 53 தடவைகள் உரையாடியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தி, திரிபுபடுத்தப்பட்டதாகும்.
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளேன். நான் போதை வியாபாரிகளோடு தொடர்பில் இருந்தால் ஏன் என்னை கைது செய்யவில்லை என கேட்கிறேன்.
தேர்தல் காலத்தில் எங்களுடன் பணியாற்றிய ஒருவர் பாவித்த சிம் அட்டை சிறைச்சாலையில் இருந்த ஒரு சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டது. சிறைச்சாலைக்குள் இருந்து எவரும் என்னுடன் சட்டவிரோதமாக தொலைபேசியில் கதைக்கவில்லை என்பதை குற்றப்புலனாய்வு திணைகக்களத்திற்கு தெரிவித்தேன்.
அத்துடன் குறித்த சிம் அட்டையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் 2021, 2024 காப்பகுதியிலே வந்திருக்கிறது. அந்தக்காலப்பகுதியிலே எங்களுடன் தேர்தல் காலங்களில் பணியாற்றி குறித்த நபரே அந்த சிம் அட்டையை பயன்படுத்தி இருந்தார். என்றாலும் தற்போது சிறைச்சாலையில் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிம்காட்டில் இருந்து 2024ஆம் ஆண்டுக்கு பின்னர் எனக்கு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேநேரம் எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் கிராண்பாஸ் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுர அலைவரிசையில் இருந்தாகும். மாறாக வெலிக்கடை பகுதியில் உள்ள தொலைபேசி அலைவரிசை கோபுரத்தில் இருந்த எந்த அழைப்பும் வரவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது என்றார்.