சென்னை பல்கலையில், சாயம் போன துணி போல, சமய படிப்புகளில் யாரும் சேராததால், காலாவதியாகி உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1857ல் தென் மாநிலங்களிலேயே முதல் பல் கலையாக, சென்னை பல்கலை துவக்கப் பட்டது. முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ், ஆய்வு படிப்புகளை, 78 துறைகள் வாயிலாக வழங்கி, பலதுறை அறிஞர்களை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கு உண்டு.
தற்போது, பல்கலையின் மதிப்பும் தரமும் பின்தங்கி, மாநில பல்கலைகளின் தரவரிசையில், 11வது இடத்துக்கு சென்று விட்டது. இந்நிலையில், கணிதம், குற்றவியல், சைபர் தடயவியல், தகவல் பாதுகாப்பு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், பொருளாதாரம், சர்வதேச சட்டம் உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆனால், போதிய பேராசிரியர்கள் இல்லாதது, ஆராய்ச்சி, தனிப்பயிற்சிக்கு வாய்ப்பில்லாதது உள்ளிட்ட காரணங்களால், இந்த துறைகளும் சிக்கலில் உள்ளன. முக்கியமாக, எப்போதோ உருவாக்கப்பட்ட சமயம் சார்ந்த துறைகள், தற்போதும் அதே பாட புத்தகங்களுடன் உள்ளன. அதில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, 3 லட்சம் ரூபாய்; இணை பேராசிரியர்களுக்கு, 2 – 2.50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தரப் படுகிறது.
ஆனால், அந்த துறைகளில் மாணவர்கள் அரவே சேரவில்லை. முக்கியமாக தத்துவம், கிறிஸ்துவ படிப்பு, பவுத்தம், சமணம், சைவ சித்தாந்தம், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட சமயம் சார்ந்த துறைகளும், ஹிந்தி, மலையாளம், கன்னடம், அரபு, தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கப்பலகை உள்ளிட்ட சிறுபான்மை மொழித்துறைகளும் மூடப்பட்டே உள்ளன.