பாகிஸ்தானில், அணு ஆயுதம் முதல் நாட்டின் நீதித்துறை வரை, பரவலான முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு வழங்கும், 27வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், அந்நாட்டின் பார்லிமென்டின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. அமைதியான ராணுவ புரட்சி என்று கூறப்படும் இதன் மூலம், பாக்., பிரதமர் மற்றும் அதிபரின் பதவிகள், ‘வெத்து’ நாற்காலிகளாக மாற உள்ளன.
அனைத்து அதிகாரங்களும் அசிம் முனீரிடமே இனி இருக்கும் என்பது, இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது . நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி வகித்தாலும் ஆட்சியின் கட்டுப்பாடு பெரும்பாலும், அந்நாட்டு ராணுவத்திடமே இருக்கும்.
கட்டுப்பாடு கைமீறுகிறது என தெரிந்தால், இரவோடு இரவாக ஆட்சியை கவிழ்த்து விட்டு, ராணுவ ஆட்சியை அமல்படுத்தி விடுவர். இதற்கு முன், 1958ல் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அயூப் கான், முதல் முறையாக ராணுவ ஆட்சியை அறிவித்தார்.
அவருக்கு பின், ராணுவ தளபதிகளாக இருந்த, முகமது ஜியா உல் ஹக், 1977லும், பர்வேஷ் முஷாரப், 1999லும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்து விட்டு, நேரடி ராணுவ ஆட்சியை அறிவித்தனர்.
இந்த ராணுவ ஆட்சிகள் பல ஆண்டுகள் நீடித்தன. பொருளாதார வளர்ச்சியில், பாகிஸ்தான் பின் தங்கியதற்கு, இந்த ராணுவ ஆட்சிகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது பாக்., ராணுவ தளபதியாக அசிம் முனீர் உள்ளார். பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி வகிக்கிறார். அசிம் முனீரின் பதவிக்காலம் வரும், 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
தற்போது அவர், ‘பீல்டு மார்ஷல்’ என்ற அந்தஸ்தில் உள்ளார். அந்த வகை உயர் பிரிவுக்கு, பதவி நீட்டிப்பு செய்ய, பாக்., அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதிகளான ஜியா உல் ஹக், முஷாரப் ஆகியோர் முயன்றும் முடியாததை துப்பாக்கி ஏந்தாமல் முடித்து காட்டி உள்ளார் அசிம் முனீர். இதன் வாயிலாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரம், அசிம் முனீரின் கையில் இருக்கும். அதிபர் அசிப் அலி ஜர்தாரியின் பதவியும் வெறும் அலங்கார பதவியாகவே இருக்கும்.