மதுரை
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நெஞ்சுவலி காரணமாக மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனி கோவில் நில மோசடி – சிபிசிஐடி விசாரணை:
பழனி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புடைய நிலம் என கூறப்படும் இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 பேர் கைது – வக்கீல் திடீர் மரணம்:
இந்த வழக்கில் இதுவரை 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, இதற்கு உதவிய வக்கீல் அன்வர்தீன் மற்றும் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த கொடைக்கானல் பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வக்கீல் அன்வர்தீன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நீதிபதி ராஜபிரபு விசாரணை நடத்தினார்.
நெஞ்சுவலியால் சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதி:
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிறையிலிருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்குத் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் விளக்கம்:
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துப் பேசிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், “ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் ‘ஸ்டெண்ட்’ வைத்துள்ளார். மேலும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகளும் உள்ளன. தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. உடல்நிலையைப் பொறுத்துத் தேவைப்பட்டால் மீண்டும் அவருக்கு ‘ஸ்டெண்ட்’ பொருத்தப்படும். தற்போது அவர் இதயவியல் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்,” எனத் தெரிவித்தனர்.
#PalaniTemple #PalaniLandScam #JustinManikandan #MaduraiGH #CBCID #TamilNaduNews #Madurai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates