சென்னை
ஆணவக்கொலையில் ஈடுபடுவர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், நடப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவப்படுகொலைகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையிலான சிறப்புக்குழு விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகிறது. இந்த அறிக்கை முழுமையாகத் தயாரானதும், அதனைத் தீவிரமாகப் பரிசீலித்து ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான ‘தனிச்சட்டம்’ இயற்றுவது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இறுதி முடிவு எடுப்பார்,” என்று தெரிவித்தார்.
தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை:
மேலும் பேசிய அவர், “ஆணவப் படுகொலையில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இன்று ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான அதிரடி அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாகும். ஆணவப்படுகொலைகளைத் தடுப்பது என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பாகும்,” என வலியுறுத்தினார்.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கூடுதல் கவனம்:
“சமீபத்தில் எம்.சி. ராஜா விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளிலும் தங்கியுள்ள மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்குவதில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த மாணவர்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC) மூலமாக நிரப்பும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன,” என்று அமைச்சர் கூறினார்.
ரூ.3,900 கோடி நிதி ஒதுக்கீடு – செயலாளர் விளக்கம்:
அமைச்சரைத் தொடர்ந்து பேசிய சமூக நீதித்துறை செயலாளர் சுப்பையன், “இந்த பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.3,900 கோடி பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பாகவும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் எந்த நிதியும் திருப்பி அனுப்பப்படவில்லை; முழு நிதியும் முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு துறைக்காக ஒதுக்கப்படும் நிதியை, எக்காரணம் கொண்டும் வேறு துறைக்கு மாற்றிச் செலவு செய்ய முடியாது,” என்று திட்டவட்டமான விளக்கத்தை அளித்தார்.
#MinisterVanniArasu #HonorKillingLaw #ChiefMinisterVijay #JosephVijay #TVKGovernment #SocialJusticeTN #TamilNaduBudget #TNAssembly #TamilNaduNews #TNPolitics #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates