கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான கிச்சா சுதீப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மார்க்’ எனும் திரைப்படம் – கொமர்சல் வித் கொமடி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ‘ எனும் திரைப்படத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு , குரு சோமசுந்தரம், தீப்ஷிகா, ரோஷினி ஹரி பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீனிஷ் பி. லோக்நாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் விஜய் கார்த்திகேயன் பேசுகையில், ” ‘மேக்ஸ்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் கிச்சா சுதீப்புடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நடிகர் சுதீப்பின் நகைச்சுவையான நடிப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் பல அடுக்குகள் உள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவரும்” என்றார்.