கொழும்பு மாநகரசபையின் தோல்வியடைந்த அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை மீண்டும் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடியே இந்த தீர்மானத்தை மேற்கொள்ளனர்.
இதுதொடர்பில் மாநகரசபையின் கூட்டு எதிர்க்கட்சிகளின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவிக்கையில், காெழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற வாக்கெடுப்பில் 57 க்கு 60 என்ற அடிப்படையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
தோற்கடிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் ஒன்று மீண்டும் 14நாட்களுக்குள் சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள வேண்டும். என்றாலும் இன்னும் 5நாட்களில் இந்த வருடம் முடிவடைவதால், எதிர்வரும் 31ஆம் திகதி வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் சாத்தியப்படாத வருமான இலக்கு போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்டு, கூட்டு எதிர்க்கட்சிகள் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் 31ஆம் திகதி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தையே மீண்டும் சமர்ப்பித்தால், அதற்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது. அதனால் கொழும்பு மாக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான முறையில் தயாரித்து சமர்ப்பித்தால், அது தொடர்பில் எமக்கு ஆராய்ந்து பார்க்க முடியும்.
அதேநேரம் 31ஆம் திகதி வரவு செலவு திட்டம் காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும் . விவாதம் இடம்பெறாது என்றார்.