தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரை விவகாரத்துக்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத் தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சத்தனமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
சைவ மகா சபையின் கண்டன அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சமனாக மதிக்கவேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள், ஒருதலைப்பட்சமாக, சட்ட ரீதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.
தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய அந்த பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சத்தனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகவே பார்க்கின்றோம்.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறாக எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு உறுதியளிக்க வேண்டும் என்பதை சைவசமய மக்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது.