தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சர்வதேச லயன்ஸ் கிளப் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தந்தப் பகுதி இளைஞர்களை இத்திட்டத்தில் இணைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாத்தறை ராகுல சந்திக்கு அருகிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரிய மொழிப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வேலை பெற்றுத் தரப்படும் எனக் கூறி, தலா 20,000 ரூபாய் பதிவுக்கட்டணமாக அறவிடப்பட்டுள்ளது.
பதிவு செய்பவர்களுக்கு லயன்ஸ் கிளப் மூலம் 35,000 ரூபாய் பெறுமதியான மொழிப்பயிற்சி வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் ஆசை காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரு இரகசிய உத்தியோகத்தர்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு மார்ச் 28 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் காலியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என்பதும், ஒரு ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் இதற்கு முன்னர் காலி பகுதியில் மொழிப்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வந்ததோடு, ஜப்பான் வேலை வாய்ப்பு தொடர்பிலும் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் ஏப்ரல் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தென் கொரிய வேலை வாய்ப்புத் திட்டம் என்பது முற்றிலும் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு செயற்திட்டமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் இணைந்து இதனை முன்னெடுப்பதில்லை. எனவே, வெளிநபர்களிடம் பணத்தையோ அல்லது தனிப்பட்ட விபரங்களையோ வழங்கி ஏமாற வேண்டாம் எனப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.