‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்று என தொடர் வெற்றி படங்களை வழங்கி, ‘ரைசிங் ஸ்டார்’ பட்டம் பெற்ற தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நடிகர்கள் விஜய் சேதுபதி- ஆர்யா- அசோக் செல்வன் -நடிகை சுருதிஹாசன்- இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி – மாரி செல்வராஜ் – ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் மணிகண்டன், வாகை சந்திரசேகர், ஏ .வெங்கடேஷ் , ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துச்சாமி, சபு மோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீ பாதா, ஜென்சன் திவாகர் , ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் ஒரு சாதாரண மனிதனின் கதையை இந்தப் படம் பேசுகிறது. ஊழல் நிறைந்த இந்த கட்டமைப்பிடமா சரணடைவதா? அல்லது எதிர்த்து நிற்பதா ? என கதையின் நாயகனுக்கு இருக்கும் இரண்டு வழிகளைப் பற்றியும் .அதன் தொடர்ச்சியை பற்றியும் விவரிக்கிறது. தன் வாழ்வியலுக்கான போராட்டத்தை தொடங்கும் எளிய மனிதன்… மக்களின் ஆதரவால் எப்படி மக்கள் தலைவனாக உயர்கிறான் என்பதே கதை” என்றார்.