தமிழ்-கனடிய நடிகையான மைத்ரேயி இராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகளைக் குறித்து இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் அவரை இலக்கு வைத்துப் பதிவிடப்படும் இனவெறுக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, நடிகை மைத்ரேயி மற்றும் அவரது படைப்புகள் குறித்து சில சிங்கள சமூக வலைத்தளப் பயனர்கள் வெளியிட்ட இனவெறுக் கருத்துக்களை விமர்சித்த அதேவேளையில், தங்களின் இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மைத்ரேயியின் வெற்றியைக் குறித்து இலங்கையர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறும், அதற்குப் பதிலாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கை வம்சாவளி மக்களின் சாதனைகளை அங்கீகரிக்குமாறும் அவர் சிங்கள சமூக வலைத்தளப் பயனர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மைத்ரேயி இராமகிருஷ்ணன் மற்றும் அவரது சமீபத்திய நெட்ஃபிலிக்ஸ் திரைப்படமான ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ (Best of the Best) ஆகியவற்றைச் சுற்றி இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையிலேயே இவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. திரைப்பட விளம்பரத்தின் போது இந்த கனடிய நடிகை தனது தமிழ் மற்றும் இலங்கை வேர்கள் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து சர்ச்சைகள் தீவிரமடைந்தன, அதையடுத்து சில சமூக வலைத்தளப் பக்கங்கள் அந்தத் திரைப்படத்திற்கு எதிர்மறையான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வழங்குமாறு அழைப்பு விடுத்தன. நடிகைக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட இழிவுபடுத்தும் கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு ஒன்ராறியோவின் மிசிசாகாவில் பிறந்து வளர்ந்தவர் மைத்ரேயி இராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்ஃபிலிக்ஸ் தொடரான ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) இல் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் சர்வதேச அளவில் பிரபலமானார்.