கொட்டகலை, ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரொப்கில் தோட்டத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பொது இடம் பல ஆண்டுகளாக இந்து மற்றும் கிறிஸ்தவ
ஆலயங்களின் திருவிழாக்கள், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், சீரற்ற காலநிலையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளும் இங்கிருந்தே முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
ரொப்கில், எரிடன், தொலைச்சாலைபுரம் உள்ளிட்ட நான்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் பாதையை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு மரப்பலகை ஆலை அமைக்கப்பட்டால் பொதுமக்களின் போக்குவரத்து, ஆலய நிகழ்வுகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சம் வெளியிட்டனர்.
அத்துடன், ஆலையின் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தூசி காரணமாக வயோதிபர்கள், நோயாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே, மழைக்காலங்களில் தமது பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான காணிகளை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த ஆற்றை அகலப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
“எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த இடத்தில் மரப்பலகை ஆலை அமைக்க அனுமதிக்க மாட்டோம். பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் இந்த இடத்தைப் பாதுகாக்கும் வரை எமது போராட்டம் தொடரும்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்களின் போக்குவரத்து, சமய நடவடிக்கைகள், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, மரப்பலகை ஆலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அதற்கான மாற்று இடத்தைத் தெரிவுசெய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.