சென்னை
மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்று வரும் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்:
இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் சதீசன், தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
“நதிநீர் ஒத்துழைப்பு தேவை”:
மாநாட்டில் உரையாற்றிய டி.கே.சிவக்குமார், “தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர, பிரித்து விடக் கூடாது. நதிநீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து, நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுக வேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லைகள் தெரியாது,” என்று வலியுறுத்தினார்.
“எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே”:
“கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்தே செயல்படுகிறது. அதேசமயம், கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும் மதிக்க வேண்டும். நாங்கள் இங்குப் புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாகவே வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு ஆகியவையே கர்நாடகாவின் கொள்கைகள்,” என்றார்.
மேகதாது குறித்து டி.கே.சிவக்குமார் வாதம்:
மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், “மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் மிக முக்கியமான ஒரு திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். அதில் சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கும் கட்டாயம் பயன்படும்,” என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
#DKShivakumar #SouthernZonalCouncil #AmitShah #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #MekedatuDam #CauveryIssue #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates