ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சியை 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைசரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி கைதுசெய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள், அந்தப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்ட தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய, 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை (19) அவரை மேலும் 30 நாட்கள் தப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் அனுமதி பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை (16) அன்று சந்தன கத்திரியாரச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இலக்கம் 5 விசாரணை அறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றில், பிலியந்தலை பகுதி வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இலக்கம் 5 விசாரணை அறை அதிகாரிகள், கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றத்தில் விசேட சோதனை அனுமதியைப் பெற்று குறித்த வீட்டைச் சோதனை செய்திருந்தனர். இரண்டு மாடிகளைக் கொண்ட சந்தன கத்திரியாரச்சியினுடைய குறித்த வீட்டின் முன் மற்றும் பின்பக்க அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைக்குண்டு மற்றும் பல்வேறு ரகத் தோட்டாக்களும் நான்கு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, ஞாயிற்றுக்கிழமை (19) அவரை 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தன கத்திரியாரச்சியிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.