சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் மீளாய்வு குழுவின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, 25 இலட்சம் முஸ்லிம் மக்களின் சமய உரிமையை பாதுகாக்கும் வகையில் குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைக்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டத்தக்கதமாகும். இதன் மூலம் மக்கள் சேவைகள் தரமுயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்றாலும் துரதிஷ்டவசம் என்வென்றால் எமது புனித அல் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதில் இந்த அரசாங்கம் கழி யுகத்திலே இன்னும் இருந்து வருகிறது. கியூஆர், கோடை பயன்படுத்தி, கையடக்க தொலைபேசியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அல் குர்ஆன் மொழிபெயர்ப்புகளை தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.
ஆனால் சவூதி நாட்டில் இருந்து வந்த அல்குர் பிரதிகள் இன்று விடுவிக்கப்படாமல் சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் நாங்கள் இன்று டிஜிட்டல் துறை தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் துறை மூலம் இந்த அல் குர்ஆனின் இந்த தமிழ் மொழி குர்ஆன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மொழிபெய்ர்ப்புகளை பார்க்கலாம். தமிழ் மொழிபெயர்ப்பு குர் ஆனை இறக்குமதி செய்ய கடந்த கால அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமா என கேட்கிறேன். இதன் மூலம் ஒரு சமயத்தின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது.
கடந்த அரசாங்கம் இதனை தடை செய்துள்ளதை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கம் அவ்வாறு செயற்பட தேவையில்லை. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்தே மக்களிடம் வாக்கு கோரினர். மக்களும் அதற்காகவே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, இந்த குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வு குழுவின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு, 25 இலட்சம் முஸ்லிம் மக்களின் புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.