மதுரை
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அவதூறு காட்சிகளை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக முடித்து வைத்துள்ளது.
பாப்பாபட்டி கிராம மக்களின் குற்றச்சாட்டு:
உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஜனநாயகன் திரைப்படத்தில் எங்கள் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடப்பது போலவும், வாக்களிப்பவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பெண்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் பொய்யான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது கிராம மக்களின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்த அவதூறு காட்சிகளை நீக்க வேண்டும்; அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
நீதிபதிகளின் அதிரடி கேள்விகள்:
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “படத்தில் ‘பாப்பம்பட்டி’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது; மனுதாரரின் கிராமமான ‘பாப்பாபட்டி’ பற்றி கூறவில்லை” என விளக்கமளிக்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “ஒரு படத்தின் ட்ரெய்லரில் எம்.எல்.ஏ-வைக் கட்டி வைத்துச் சாட்டையால் அடிப்பது போலக் காட்சி இருந்தால், உடனே அதை நீக்க வேண்டும் என எம்.எல்.ஏ-க்கள் வழக்குத் தொடர முடியுமா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்:
தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “திரைப்படத்தில் பாப்பம்பட்டி என்றுதான் கூறப்பட்டுள்ளது; உசிலம்பட்டி என்றோ அல்லது குறிப்பிட்ட இந்தக் கிராமத்தையோ சுட்டிக்காட்டவில்லை. இதுபோன்று பல கிராமங்கள் கூட இருக்கலாம். மேலும், சினிமா படங்களில் கற்பனை என்பது தவிர்க்க முடியாத ஒன்று,” என்று திட்டவட்டமாகக் கூறி வழக்கினை முழுமையாக முடித்து வைத்தனர்.
#Jananaayagan #JananaayaganMovie #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #HVinoth #MaduraiHighCourt #PappapattiIssue #TamilCinemaNews #KollywoodUpdates #MaduraiNews #TamilNaduNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates