இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும்.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார்.
இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.