தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், இந்திய தேசிய அளவிலான இந்துத்துவா தலைவருமான ஹெச். ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘செய் செய்யாதே ‘எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் டொக்டர் எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படத்தில் எஸ். ராஜா, குரு விஜய், ஹெச் .ராஜா, தர்ஷினி ரெட்டி, பிரதிக்ஷா மனு பிரசாந்த் , சிதம்பரம் , மௌனிகா பிரீத்தி, தபிதா குணரத்னே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வாசு பி. ராம்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ராஜா மற்றும் ஹரிணி சுப்பு இசை குழுவினர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சுகாதாரத் துறை சார்ந்த விழிப்புணர்வு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹரிணி சுப்பு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கதிரேசன், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படம் வைத்தியத்துறை சார்ந்த சமூக கருத்தியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. நோய் குறித்த விழிப்புணர்வு – சமூகப் பொறுப்பு மற்றும் சுகாதார துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களின் தியாக வாழ்வியல். என பல விடயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.