சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ரூபா 52 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், சீன நாட்டவர்கள் ஐவர் இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வயதுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் ஆவர். இவர்கள் இன்று அதிகாலை 01:10 மணியளவில் சீனாவின் குன்மிங் (Kunming) நகரில் இருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான சேவைக்குச் சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலைய வருகை முனையத்தில், எவ்வித பொருட்களும் இல்லை என அறிவிக்கப்படும் ‘பச்சை வழி’ (Green Channel) ஊடாக இந்தச் சிகரெட்டுகளை கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான ‘செவன் ஸ்டார்’ (Seven Star) ரகத்தைச் சேர்ந்த 34,800 சிகரெட்டுகள் அடங்கிய 174 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதியின் மொத்த பெறுமதி 5,220,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீன வர்த்தகர்கள் ஐவரையும் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.