சென்னை
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்ட பிளஸ் 2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசு முற்றிலும் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போதையைத் தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை:
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, சக மாணவர் மீது கஞ்சா புகையை ஊதியதைத் தட்டிக்கேட்ட விவகாரத்தில், பிளஸ் 2 மாணவன் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 12 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்:
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆளும் தவெக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். “கோவையில் போதை கும்பலைத் தட்டிக்கேட்டதற்காகக் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட அடுத்த சில தினங்களில், சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்குத் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பதற்குத் தமிழ்நாட்டில் தொடரும் கொலைகளே சாட்சி,” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நிர்வாகத் திறனற்ற கோமாளி சர்க்கார்”:
தொடர்ந்து ஆவேசமாகப் பதிவிட்டுள்ள அவர், “நிர்வாகத் திறனற்ற இந்த கோமாளி சர்க்காரைக் கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்குக் காரணம். போதைப் பொருள் பயன்படுத்துவதையோ, விற்பதையோ அம்பலப்படுத்தினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் பகிரங்க எச்சரிக்கை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் இருப்பது வெட்கக்கேடு என்று விமர்சித்துள்ள உதயநிதி, “பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் (Counselling) வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#UdhayanidhiStalin #DMK #ChennaiMurder #TNLawAndOrder #TVKGovernment #Thiruvottiyur #ChennaiNews #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates