‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் – ‘ ரைசிங் ஸ்டார் ‘ சண்முக பாண்டியன் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து மிரட்டும் ‘கொம்பு சீவி’ படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் சரத்குமார் ,சண்முக பாண்டியன், தார்னிகா, சுஜித் சங்கர் , கல்கி, முனீஸ்காந்த் , காளி வெங்கட் , ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த படத்தில் இடம் பெறும் ‘அம்மா என் தங்க கனி.. நீதானே எல்லாம் இனி.. தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்?’ எனும் பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய பாடலுக்கு, யுவன் சங்கர் ராஜா – இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பாடி இருக்கிறார். அம்மா சென்டிமென்ட் பாடல் என்பதாலும்… உணர்வுபூர்வமான பாடல் என்பதாலும்… இந்தப் பாடலை யுவன் மற்றும் இசைஞானி இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நிச்சயமாக இந்த ஆண்டின் ஹிட் லிஸ்டில் இடம்பெறும் என படக்குழுவினர் உறுதிப்பட கூறுகிறார்கள்.
இதனிடையே இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக கொமடி நடிகர் சூரியின் பங்களிப்பும் சிறப்பானதாக இருந்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து பயணிக்கும் நகைச்சுவை வேடத்தில் நடிகர் கல்கி நடித்திருக்கிறார் என்றும் , இந்தப் படம் வெளியான பிறகு சூரியின் இடத்தை கல்கி நிரப்புவார் என்றும் திரையுலகினர் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.