அரச வைத்திய அதிகாரிகள் சங்க்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நிதி மற்றும் நிர்வாக முறைகேடு சம்பவங்கள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரை அவரது பதவியில் இருந்து நீக்க கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி அவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அதன்படி, குற்றச்சாட்டுகளுக்குள்ளான, வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதை அடுத்து, அவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது வழக்கம் போல் நோயாளர் பராமரிப்பு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.