கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) நகரில் கடந்த வார இறுதியில் முகமூடி அணிந்த நபர்களால் நடத்தப்பட்ட ‘வெள்ளை மேலாதிக்கவாத’ (White Supremacist) பேரணிக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து மாகாணக் காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று, ஷாவினிகன் நகரின் தியாகிகள் நினைவிடத்திற்கு (Cenotaph) அருகில் முகமூடி அணிந்த சுமார் 20 பேர் திரண்டு, பிரெஞ்சு மொழியில் “ஒரு வெள்ளை கியூபெக் எனக்கு நினைவிருக்கிறது” (I remember a white Quebec) என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்திப் பேரணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கியூபெக் மாகாணக் காவல் துறையின் (SQ) செய்தித் தொடர்பாளர் பெனாய்ட் ரிச்சர்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்: இந்த வெறுப்புப் பேரணிக்குக் கியூபெக் பிரீமியர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது நாங்கள் ஆதரிக்கும் கியூபெக் அல்ல, எங்களுக்கு இத்தகைய கியூபெக் வேண்டாம்; இந்தச் செயல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஷாவினிகன் நகர மேயர் இவ்விபரீதப் பேரணிக்கு நகராட்சியிடம் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை என்றும், பேரணியில் பங்கேற்றவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் மத்திய ‘கனடிய அடையாளம், கலாச்சாரம் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகள்’ துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தனது கண்டனப் பதிவில், “ஷாவினிகனில் நடந்த இந்த இனவெறிப் பேரணி வெட்கக்கேடானது மற்றும் நமது சமூக மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு நமது சமூகங்களில் இடமில்லை” என்று சாடியுள்ளார்.
விளையாட்டுக் கழகங்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தைNormalise செய்ய முயலும் வெறுப்புக் குழுக்களின் பின்னணி குறித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இச்சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது