தஞ்சாவூர்
தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது, சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோவுக்குத் தஞ்சை மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது.
பேனர்கள் அகற்றம்.. விசிக மறியல்:
விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் மற்றும் உளுந்தூர்பேட்டை மாநாட்டை முன்னிட்டுத் தஞ்சை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் தொடர்ச்சியாக ஹாரன் அடித்ததால், அவருக்கும் அரசியல் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸை அறைந்த ஆகாஷ்:
மோதலைத் தடுக்கும் விதமாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அப்துல் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், ஆகாஷ் போலீசாரை நோக்கித் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் குறைந்தபட்சப் பலப்பிரயோகம் செய்தபோது, ஆத்திரமடைந்த ஆகாஷ் போலீஸ் அதிகாரி ரஹீமைக் கன்னத்தில் அறைந்தார். உடனே மற்ற போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தேவையின்றித் தாக்கவில்லை” – காவல்துறை பகிரங்க அறிக்கை:
இந்தச் சம்பவம் குறித்துத் தஞ்சை காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தடுக்கும் நோக்கத்திலேயே ஆகாஷ் மீது குறைந்தபட்சப் பலப்பிரயோகம் செய்யப்பட்டது; போலீசார் அவரைத் தேவையின்றித் தாக்கவில்லை. ஆகாஷ் மீது ஏற்கனவே கடந்த ஆண்டு பெண் ஒருவரைத் தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தான் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரையும் தகாத வார்த்தைகளால் பேசி பிரச்சனை செய்துள்ளார்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
#Thanjavur #TNPolice #TamilNaduPolice #ViralVideo #ThanjavurPolice #VCKProtest #Thirumavalavan #TamilNaduNews #TNPolitics #TrendingTN #LatestNewsTN #ViralNewsTN #TNNewsUpdates