சென்னை
கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றி யோசித்திருந்தால் இன்று ஆட்சி நம்மிடம் இருந்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மனிதநேய உதய நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேச்சாளர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவுக்கு இன்று விடியல் தேவைப்படுவதாகவும், அந்த விடியலை உதயநிதியால்தான் கொண்டு வர முடியும் என்றும் கூறினார். திராவிட இயக்கம் தமிழகத்தில் தொடங்கப்படாமல் இருந்திருந்தால் பெண்கள் இன்றும் அடிமையாக இருந்திருப்பார்கள் என்றும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்குத் தமிழகத்தில் முதல் சிலை வைத்தது திமுகதான் என்றும் குறிப்பிட்ட அவர், பல நன்மைகள் செய்தும் தமிழ்நாட்டு மக்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார். கரூர் விவகாரத்தில் 5 நிமிடம் மாற்றிச் சிந்தித்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும் என்றும், அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தனது தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார் எனத் தாய் உள்ளத்துடன் கூறியதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் திமுகவினர் கவனம் செலுத்தாமல் விட்டதால் ஏமாந்துவிட்டதாகவும், வருங்காலத் தேர்தல்களில் தேர்தல் முறையை மாற்றி சமூக வலைதளங்களில் வேகமாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டிய அவர், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் முகத்தைப் பார்க்க முதலமைச்சர் யோசிப்பதாகவும், இந்த ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுவதாகவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய பர்வீன் சுல்தானா, தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், பெண்களின் சுயமரியாதை பேணப்பட வேண்டும் என்றும், தோற்ற இடத்தில்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்
. இதையடுத்துப் பேசிய சுப.வீரபாண்டியன், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது தமிழ்நாட்டிற்கு அவமானம் என்றும், உதயநிதி பிறந்தநாளில் கைது செய்யக் காத்திருந்து காவலர்கள் தவெக எம்.எல்.ஏவை கைது செய்துள்ளனர் என்றும், தேனி சோத்துப்பாறை அணையை யாருக்கும் தெரியாமல் தவெகவினர் திறந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். மேகதாது அணை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ஆஜராகாததையும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்படுத்தியுள்ள நெருக்கடியையும் குறிப்பிட்ட அவர், பேசாத முதலமைச்சர்தான் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும் தெரிவித்தார்.