கடந்த விக்டோரியா தின (Victoria Day) வார இறுதி நாட்களில் ஏற்பட்ட பாதுகாப்பு கவலைகளைத் தொடர்ந்து, சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) இந்த ஆண்டு நடைபெறவுள்ள கனடா தின (Canada Day) கொண்டாட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிராம்ப்டன் மாநகர சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள், பைகள் சோதனை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போன்ற தீவிர கண்காணிப்புகளை எதிர்பார்க்கலாம் என மேயர் பேட்ரிக் பிரவுன் (Mayor Patrick Brown) அறிவித்துள்ளார்.
கடந்த மே மாத நீண்ட வார இறுதி விடுமுறையின் போது, உத்தியோகபூர்வமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்தே இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அப்போது, கூட்ட நெரிசலுக்குள் பட்டாசுகளை கொளுத்தி எறிந்தமை மற்றும் சில இடங்களில் சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டமை போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
பிராம்ப்டன் மாநகர எல்லையினுள் ஆண்டு முழுவதும் பட்டாசுப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர். சட்டவிரோதமாகவோ அல்லது பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலோ பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் அல்லது அவர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள், சட்டவிரோத போதைப்பொருட்கள், ட்ரோன்கள் (Drones) மற்றும் லேசர் சுட்டிகள் (Laser pointers) போன்ற பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் பொருட்கள் பூங்காவிற்குள் கொண்டு வரப்படுவதை போலீசாரும் பாதுகாப்புப் பிரிவினரும் தீவிரமாகக் கண்காணித்து தடை செய்யவுள்ளனர்.
சிங்குவாசி பூங்காவில் ஜூலை 1 மதியம் 12 மணிக்கு தொடங்கும் கனடா தின கொண்டாட்டங்களில் நேரடி கலை நிகழ்ச்சிகள், குடும்பங்களுக்கான பொழுதுபோக்குகள், உணவு அங்காடிகள் மற்றும் இரவு 10 மணிக்கு பிரம்மாண்ட பட்டாசு வேடிக்கை (Fireworks display) என்பன இடம்பெறவுள்ளன.
பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்த வசதிகள் (Parking) குறைவாக இருக்கும் என்பதால், வருகை தருவோர் பொதுப் போக்குவரத்து, நடைப்பயிற்சி அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.