வடக்கு எட்மண்டனில் (Edmonton) உள்ள ஒரு வீட்டில் கடந்த ஓராண்டாக போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அந்த வீட்டை மூடியுள்ளனர்.
அந்த வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நபர்களின் வருகை, குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் அண்டை வீடுகளின் புல்வெளிகளில் மக்கள் உறங்குவது போன்ற அசாதாரணமான செயல்கள் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆல்பர்ட்டா ஷெரிஃப்களின் ‘பாதுகாப்பான சமூகங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள்’ (SCAN) பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
எட்மண்டன் காவல்துறையுடன் (EPS) இணைந்து ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில், அந்தப் சொத்தில் கணிசமான சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது உறுதி செய்யப்பட்டது. எச்சரிக்கைக் கடிதம் மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ‘கிங்ஸ் பெஞ்ச்’ (Court of King’s Bench) நீதிமன்றம் அந்த வீட்டை 90 நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.
11259-159 Ave. NW முகவரியில் உள்ள வீடு வியாழக்கிழமை நண்பகல் முதல் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
இந்தச் சொத்தின் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் ஜூன் 30, 2028 வரை அமலில் இருக்கும்.
அதிகாரிகளின் கருத்து: “குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்குப் பங்களித்த ஒரு பிரச்சனைக்குரிய சொத்தை மூடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று எட்மண்டன் துணைப் பொலிஸ் மா அதிபர் டெரெக் மெக்கின்டைர் தெரிவித்தார்.
“மக்கள் புகார் அளிக்கும்போது, பாதுகாப்பை மீட்டெடுக்க ஷெரிஃப்கள் நடவடிக்கை எடுப்பார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆல்பர்ட்டாவில் இடமில்லை,” என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மைக் எலிஸ் எச்சரித்துள்ளார்.
2025 ஏப்ரல் முதல், கடைகள், உணவகங்கள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீடு குறித்து 12 இரகசிய புகார்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.