பணியில் இருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும், ஆயுதம் ஏந்திய குற்றவாளியைத் துணிச்சலுடன் துரத்திச் சென்று பிடித்த வான்கூவர் போலீஸ் சார்ஜன்ட் க்கு (Sergeant) அவரது வீரத்தைப் பாராட்டி உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதத்தில், ‘டாஸ்க் ஃபோர்ஸ் பாரேஜ்’ (Task Force Barrage) என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சார்ஜர் ஜோயல் டுய்னிங்கா (Sgt. Joel Tuininga) ஈஸ்ட் ஹேஸ்டிங்ஸ் வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்குவதையும், டவுன்டவுன் ஈஸ்ட்சைட் பகுதியில் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ரோந்துப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென ஜோயல் டுய்னிங்காவை பின்புறமிருந்து தாக்கியதுடன், அவரது காலில் பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
கடுமையான காயங்கள் மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்ட போதிலும், ஜோயல் உடனடியாக தனது சக அதிகாரியுடன் இணைந்து குற்றவாளியைத் துரத்தினார். அதே நேரத்தில், அவசர உதவி கோரி கட்டுப்பாட்டு அறைக்கும் தகவலைப் பரப்பினார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த கூடுதல் அதிகாரிகள், அந்த நபர் கீழ்ப்படிய மறுத்ததை அடுத்து, மின்சார அதிர்வூட்டும் கருவியைப் (Conducted energy weapon) பயன்படுத்தி அவரைக் கைது செய்தனர்.
குற்றவாளி காவலில் எடுக்கப்பட்ட வேளையில், சக அதிகாரிகள் ஜோயல் டுய்னிங்காவிற்கு அவசர மருத்துவ முதலுதவி அளித்தனர். குறிப்பாக, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த அவரது காலில் இறுக்கமான கட்டு (Tourniquet) போடப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடுமையான காயங்களுக்கு மத்தியிலும் பொதுப் பாதுகாப்பிற்காக அவர் காட்டிய அசாத்திய துணிச்சல், மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி, சார்ஜர் ஜோயல் டுய்னிங்காவிற்கு ‘தலைமை காவல்துறை அதிகாரியின் பாராட்டு விருது’ (Chief Constable’s Commendation) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது