வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது நேற்றுமுன்தினம்(23) இடம்பெற்ற நிலையில் பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டன. குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு சென்றனர்.
இதன்போது சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அவரது விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கட்சி கூட்டத்தில், சுமந்திரனை ஒருமையிலும் விழித்து தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையை சமாளிக்க பெரும்பாடு பட்ட சுமந்திரன் நன்றி உரையும் கூறாமல் கூட்டத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தமக்கு சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்து, வழக்கு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழு நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெறும்போது தான் தலைவராக வருவதற்கான நரித் தந்திரோபாயமே இது என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும்போது தொகுதிக் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்வது சட்டத்திற்கும் யாப்பிற்கும் முரணானது என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.