ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்லியன்ஸ் (Orléans) நாய் பூங்காவில் இடம்பெற்றதாகப் புகாரளிக்கப்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கான சாட்சிகளையும் விபரங்களையும் ஒட்டாவா போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்லியன்ஸ் புலிவார்டில் உள்ள ‘ஹெரிடேஜ் நாய் பூங்கா’ (Heritage Dog Park at 6160 Orléans Blvd) பகுதியில் மாலை 4:00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.
சந்தேக நபரின் விபரங்கள்:
-
அடையாளம்: சுமார் 30 வயது மதிக்கத்தக்க கருப்பின ஆடவர்.
-
உயரம்: சுமார் 5 அடி 9 அங்குலம்.
-
தோற்றம்: நீளமான தலைமுடி மற்றும் ‘டிரெட்லாக்ஸ்’ (dread locks) சிகை அலங்காரம் கொண்டவர்.
-
ஆடை: பேஜ் (beige) நிற சட்டை மற்றும் தலையில் பேஜ் நிறத் துணி (bandana) அணிந்திருந்தார்.
குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஹெரிடேஜ் நாய் பூங்கா பகுதியில் இருந்தவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான எதனையும் அவதானித்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன், அந்தப் பகுதியில் வாகன கண்காணிப்பு கேமரா (dash cam) அல்லது சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்திருப்பவர்களிடமும் போலீசார் விபரங்களைக் கோரியுள்ளனர்.
பொதுமக்கள் யாரேனும் இந்த சந்தேக நபரைக்கண்டால், அவரிடம் நேரடியாகச் செல்ல வேண்டாம் என்றும், உடனடியாக 911 அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான தகவல்களை ஒட்டாவா போலீஸ் சேவையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குழந்தை துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவிற்கு (613-236-1222, ext. 5944) அல்லது saca@ottawapolice.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வழங்க முடியும். அநாமதேயமாகத் தகவல் வழங்க விரும்புவோர் ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.