சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் இலவச கார் மற்றும் பராமரிப்புப் படிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“பணம் இல்லை என்றீர்கள்… இப்போது எங்கிருந்து வந்தது?”:
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு கஜானாவில் பணம் இல்லை என்றீர்கள். ஆனால், இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
190 எம்.எல்.ஏ-க்களிடம் ஏற்கனவே கார்கள் உள்ளன:
“மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு வாகனம் வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேரிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவிலேயே குறிப்பிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி வீண் விரயம்:
ஒரு வாகனத்தின் குறைந்தபட்ச விலை ரூ.30 லட்சம் என்றாலும் வாகனங்கள் வாங்க ரூ.70 கோடியும், 234 உறுப்பினர்களுக்கும் மாதம் தலா ரூ.1 லட்சம் படி வழங்குவதால் ஆண்டிற்கு ரூ.28 கோடியும் தேவைப்படும் எனச் சுட்டிக்காட்டிய அவர், “ஆண்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி கடன் வாங்கும் நிதி நெருக்கடியில் உள்ள சூழலில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு கார் வழங்க வேண்டுமா? உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குத் தேவைப்பட்டால் உங்கள் சொந்தப் பணத்திலோ அல்லது கட்சிப் பணத்திலோ வாங்கிக் கொடுங்கள்; மக்கள் பணத்தை ஏன் விரயம் செய்கிறீர்கள்?” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
“அரசை விமர்சிக்காமல் இருக்க மறைமுகக் கையூட்டா?”:
“அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் அரசை எதிர்த்துப் பேசுவார்? ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படும் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்டுவார்கள்? அரசை யாரும் விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுகக் கையூட்டா இது? இதுதான் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் லட்சணமா?” எனவும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லை:
விவசாயிகள் விளைவித்த நெல்லைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்குகள் இல்லாமல் தார்பாய் வாங்கக் கேட்டால் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கும் தவெக அரசு, ஏற்கனவே கார்கள் வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடுவது அநீதியானது எனக் குறிப்பிட்ட சீமான், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற ஆடம்பரத் திட்டங்களைக் கைவிட்டு உண்மையான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #ChiefMinisterVijay #JosephVijay #TVKGovernment #MLACarScheme #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates