சென்னை
“நான் பேசும் மொழியை வைத்து என்னை கேலி, கிண்டல் செய்கிறீர்களா? என்னால் இப்படித்தான் பேச முடியும். இதுதான் என் தனித்துவமான பேச்சு நடை” என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாகப் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ-வின் விமர்சனமும் சபாநாயகரின் குறுக்கீடும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், “நிதியமைச்சர் உரையாற்றும்போது, ஒரு தமிழ் ஆர்வலன் என்ற முறையில் அவர் தமிழுக்கு முன்னுரிமை அளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். அவருக்கு ஆங்கிலத்தில் பெரும் புலமை உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய ஆங்கில உரை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆனால், அதே நேரத்தில் தமிழில் பல சொற்றொடர்களை அவர் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார். சில சொற்றொடர்கள் இலக்கணரீதியாகவும் சரியாக இல்லை. இதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைப் போன்று நிதியமைச்சரும் தமிழிலும் சிறப்பாக உரையாற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “நிதியமைச்சரைத் தமிழில் பேச வேண்டும் என்று கூறிவிட்டு, நீங்களே ‘பட்ஜெட், பட்ஜெட்’ என்று ஆங்கிலத்தில் சொன்னீர்கள். தமிழில் ‘நிதிநிலை அறிக்கை’ என்று சொல்லலாமே” எனச் சுட்டிக்காட்டினார். அதற்கு எம்.எல்.ஏ ராஜேந்திரன், “நீங்கள் நேரக் கட்டுப்பாட்டை விதித்திருப்பதால், விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே சுருக்கமாகவும் வேகமாகவும் பேசுகிறேன்” எனத் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சித் தலைவர் சங்கத் தமிழிலா பேசுகிறார்?” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
அப்போது எழுந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கென்று ஒரு இயல்பான பேச்சுத் தமிழ் இருக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனி தமிழ் வழக்குகள் உள்ளன. அந்தந்த வட்டார மக்களின் பேச்சு வழக்கில்தான் தமிழ் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நிதியமைச்சர் என்னிடம் தமிழ் வகுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர் கூறினார். அப்படிப் பார்த்தால், மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் என்ன சங்கத் தமிழிலா பேசுகிறார்?
அப்படி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றால், நேர்மையான ஒரு நிதிநிலை அறிக்கையை எப்படித் தயாரிப்பது என்பது குறித்து நிதியமைச்சர்தான் ஒரு வகுப்பு நடத்த வேண்டும். அதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்” எனத் தக்க பதிலடி கொடுத்தார்.
“நான் மாற முடியாது!” – அமைச்சர் மரிய வில்சன் ஆவேசம்!
இதனைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “நான் கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாகக் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தொடர்பு மொழி பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருந்துள்ளது. இந்தச் சட்டப்பேரவையில் கொஞ்ச காலமாக உருவக்கேலி செய்வது, சாதி மற்றும் பெண்கள் தொடர்பாக விமர்சிப்பது என இருந்தவர்கள், இப்போது மொழியை வைத்தும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால், ‘செயல்… செயல்’ என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார் எங்கள் தலைவர்.
தமிழ்நாட்டில், கடந்த 70 நாட்களுக்கு முன்பு இருந்ததற்கும், இப்போது இருக்கும் நிலைமைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. வெறும் 65 நாட்களில் சுமார் ரூ.15,000 கோடியை அரசுக் கருவூலத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். இது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இது ஒட்டுமொத்த அமைச்சரவையின் கூட்டு முயற்சியால் கிடைத்த மாபெரும் முன்னேற்றம்.
நீங்கள் தமிழில் இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னால் இப்படித்தான் பேச முடியும். இதுதான் என்னுடைய தனித்துவமான பேச்சு நடை. இதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உங்களுக்காக நான் என்னை மாற்றிக்கொள்ள முடியாது. மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நான் பேசுகிறேன்” என்று மிகவும் ஆவேசமாகக் கூறினார்.
நிலைமையைத் தணிக்கும் வகையில் பேசிய சபாநாயகர், “நீங்களும் நன்றாகத்தான் பேசினீர்கள். அதோடு அந்தப் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம். இதை மிகவும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனாலும் விடாத அமைச்சர் மரிய வில்சன், “என்னுடைய பாணி இதுதான். அதற்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. எல்லோருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது” என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாகத் தெரிவித்தார்.
#MariaWilson #FinanceMinisterTN #MinisterRajmohan #TNAssembly #TVKGovernment #ChiefMinisterVijay #ThalapathyVijay #TNPolitics #TamilLanguage #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates