சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தால் ஒட்டுமொத்த அவையும் சிரிப்பலையில் மூழ்கியது!
சட்டசபையில் இன்று விவாதத்தின் போது எழுந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைக் குறிப்பிட்டு, “எனக்கு நல்லா நெருக்கமானவர், மிகவும் அன்பானவர்” என நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது குறுக்கிட்ட அவையை வழிநடத்திய துணை சபாநாயகர், “அமைச்சரின் பெயரை நேரடியாகக் கூறாமல், ‘மாண்புமிகு அமைச்சர்’ என்று கூறினால் நன்றாக இருக்கும்” என அறிவுறுத்தினார்.
இதற்குச் சற்றும் சளைக்காமல் சுவாரஸ்யமாகப் பதிலளித்த எம்.எல்.ஏ. கார்த்திகேயன், “ஏங்க.. எங்க நட்பில் ஏன் தலையிடுகிறீர்கள்? நாங்க ரொம்ப நல்ல நட்பாக இருக்கிறோம். அதை ஏன் பிரிக்க நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குத் துணை சபாநாயகர் புன்னகையுடன், “அவைக்கு வெளியே சென்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்று பதிலளித்தார்.
ஆனாலும் பேச்சை விடாத கார்த்திகேயன் ஒரு சுவாரஸ்யமான பிளாஷ்பேக்கை அவையில் உடைத்தார். “இல்லை… இல்லை.. இது உண்மை சம்பவம்! பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறந்து இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் எங்களின் கட்சியில் (திமுக) முதல் முறையாக சீட் கேட்டு வந்தபோது, அவர்தான் என்னை அழைத்துக்கொண்டு போய், இவன் என்னுடைய சொந்தக்காரர் என்று கூறி சீட் வாங்கித் தந்தவர். இங்கு லீமா ரோஸ் (அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்) இருக்கிறார். இந்த இடத்தில் இதைச் சொல்லாவிட்டால் தப்பாகப் போய்விடும்” எனக் கூறிச் சிரித்தார். இதைக் கேட்ட அவையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் விழுந்து சிரித்தனர்.
இந்த கலகலப்பான வேளையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திடீரென எழுந்து, “இது எதற்கு என்று தெரியவில்லையே.. அவர் பாட்டுக்குச் சிவனே என்று அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். எதற்கு அவரைப் போட்டுக் கோர்த்து வாங்கிகிட்டு இருக்கீங்க என்று தெரியவில்லையே!” என்று கலாய்த்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் இந்த நகைச்சுவையான உரையாடலால் சட்டப்பேரவையில் இன்று சிறிது நேரம் பெரும் சிரிப்பலை எழுந்தது!
#TNAssembly #DMK #AadavArjuna #BussyAnand #RishivandiyamMLA #TamilNaduPolitics #TNPolitics #Chennai #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #TamilNaduNews #AssemblyFun