உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில், உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு குழுவினர் திட்டமிட்ட முறையில் மறைமுகமாகத் தலையிட்டு, முட்டுக்கட்டை ஏற்படுத்த முயல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை ஒரு பிரேரணை (Motion) மூலம் கோட்டை மாஜிஸ்திரேட் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்த போதே சிஐடி இந்த விபரத்தையும் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதன்போது, சந்தேக நபரான சுரேஷ் சல்லே இந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே நடந்துகொண்டு வருகிறார் என்றும், அவருக்கு உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட நபர்கள் இத்தகைய தடங்கல் விளைவிக்கும் செயல்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றும் சிஐடி புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை வெளிவராத அரசியல் பின்னணிகள் மற்றும் தொடர்புகள் அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கிலேயே இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக சிஐடி மேலும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.