ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் சுங்கத்திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தியாவிலிருந்து ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகக்கூறித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்கள், பாதுகாப்பு மற்றும் கலாசார அமைச்சின் அனுமதியுடன் விடுவிக்கப்படும் என கடந்த 17 ஆம் திகதி கலாசார அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கூறப்பட்டதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தனது புத்தகங்கள் சுங்கத்திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தனக்கு எதிரான அடிப்படை மனித உரிமை மீறல் எனக் குறிப்பிட்டும், அப்புத்தகங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் தீபச்செல்வன் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றினையும் அளித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்றைய தினம் (26) காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.