ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, உடனடி போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டத்தை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து முன்வைத்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குச் சீன ஆதரவைக் கோரி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த முன்முயற்சி வரைவு செய்யப்பட்டது. “அமைதிக்காகப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக” சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் விவகாரத்தில் சீனாவின் எதிர்வினை இதுவரை மிகவும் அமைதியாகவே இருந்து வந்துள்ளது. சீனாவிடம் போதிய எண்ணெய் இருப்பு உள்ளதாலும், ஏனைய ஆசிய நாடுகளை விட எரிபொருள் பற்றாக்குறையிலிருந்து அது ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருப்பதாலும் இந்த நிலை நீடித்தது. இருப்பினும், இந்த நெருக்கடி தொடர்ந்தால் “உலகின் தொழிற்சாலை” என்று அழைக்கப்படும் சீனாவின் தொழில்மயமான பகுதிகள் நீண்டகால பாதிப்புகளைச் சந்திக்கும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
அதிபர் ஷி ஜின்பிங் பெரிதும் விரும்பும் ‘நிலையான உலகளாவிய பொருளாதாரத்தை’ இந்தப் போர் அச்சுறுத்துகிறது. சீனா தனது ஏற்றுமதியையும் வளர்ச்சியையும் தொடர வேண்டுமானால் உலகப் பொருளாதாரம் சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மோதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பெட்ரோல் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீன அரசாங்கம் தற்போது போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்துபவராகச் சீனா முன்னரும் முயற்சித்துள்ளது. 2023-இல் சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த சீனா உதவியது. அதற்கு அடுத்த ஆண்டு, 14 பாலஸ்தீனியக் குழுக்களின் தலைவர்களை அழைத்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கவும் வழிவகை செய்தது.
தற்போதைய இந்தத் திட்டத்திற்கு மற்ற நாடுகளிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.