ரான் தனது வளைகுடா அண்டை நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அபுதாபியில் போரூஜ் பெட்ரோ (Chemical) இரசாயன ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில், ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரும், நிவாரணக் குழுக்களும் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றி வருவதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“வான் பாதுகாப்பு அமைப்புகளின் வெற்றிகரமான இடைமறிப்புகளுக்குப் பிறகு விழுந்த இடிபாடுகளால், ஆலையில் பல தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்து வருகின்றனர்,” என்று அந்த வளைகுடா அமீரகத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வானில் அழிக்கப்பட்ட எறிகணையின் சிதறல்கள் ஆலையின் மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலையின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆலைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் வரை இந்த நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும், இந்தத் தீ விபத்துக்களால் இதுவரை எந்தக் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. தீயைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.