ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஷான்சஜ் நகரில், புரட்சிகர காவல்படை தளம் அருகே நேற்று இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் பலியாகியுள்ளனர்.
ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெடிக்காமல் இருந்த குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈரான் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஷான்சஜ் நகரில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, முன்னர் வீசப்பட்டு வெடிக்காமல் இருந்த குண்டு ஒன்று வெடித்ததன் விளைவாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட மோதல், கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், போரின் பிந்தைய விளைவுகள் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சம்பவத்தின் துல்லியமான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.