மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை மீதான சர்வதேசத்தின் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் புதிய பிரேரணை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச சமூகங்கள் உணரக்கூடிய மற்றும் திருப்தியடையக்கூடிய நடவடிக்கைகளை சீராக முன்னெடுத்தால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் போன்ற அழுத்தங்கள் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளுக்குத் தீர்வுகாணுமாறு கடந்த காலங்களில் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
அதனை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மிகப்பாரதூரமானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.