இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(06.03.2026) இடம்பெற்றுள்ளதுடன், அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக ஆராய்ந்தனர்.
குறிப்பாக, பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பேணுதல் போன்ற விடயங்கள் இங்கு முதன்மை பெற்றன.
இருதரப்பு விடயங்களுக்கு மேலதிகமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பிராந்திய சவால்கள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதுடில்லியைச் சென்றடைந்த அமைச்சர் விஜித ஹேரத், அங்குள்ள இந்திய உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.