இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் இன்று வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 06:48 மணியளவில் (22:48 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவில் இருந்ததாகக் கணிக்கப்பட்ட நிலையில், பின்னர் 7.4 ஆக உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள மொலுக்கா கடலில் உருவானது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெர்னேட் (Ternate) நகரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் பதிவாகியுள்ளது. 205,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்நகரில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில்:
நிலநடுக்க மையத்திலிருந்து 1,000 கி.மீ சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் எழக்கூடும். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுலாவேசியின் மினா ஹாசா (Minahasa) பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக உள்ளூர் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுலாவேசி தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள மனாடோ (Manado) நகரில் தேசிய விளையாட்டுக் குழுவினால் நிர்வகிக்கப்படும் கட்டடம் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பான காணொளிகளை மீட்புப் படையினர் பகிர்ந்துள்ளனர்.
தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகள் மற்றும் குவியல்களுக்கு மத்தியில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பெரிய அளவிலான தளபாடங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன், உலோகக் கட்டுமானங்களும் வளைந்து உருக்குலைந்து போயுள்ளன.