சென்னை
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவை தீர்மானத்தின் எதிரொலி:
மாநிலப் பாடல் பாடப்படுவது தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த 2026 ஜூலை 9 அன்று கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என்பதால், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் தற்போது இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் பொருந்தும்?:
ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய புதிய அரசாணையின்படி, கீழ்க்கண்ட இடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் உரிய மரியாதையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்:
-
அனைத்துக் கல்வி நிறுவனங்கள்
-
பல்கலைக்கழகங்கள்
-
அரசு அலுவலகங்கள்
-
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள்
அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை:
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை ஏற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அதிரடி அரசாணை, அனைத்துக் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைமை அலுவலர்களுக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#TamilThaiValthu #TNGovernment #TamilNaduNews #Chennai #TNPolitics #TamilCulture #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates