“கனடா ஃபீஃபா உலகக் கோப்பையை இணைந்து நடத்துகிறது. அதே நேரத்தில் சுகாதார அவசரநிலைகள் அதிகரிக்கும் சாத்தியத்திற்கும் தயாராகி வருகிறது.
இந்த கோடை காலத்தில் டொரோண்டோவும் வான்கூவரும் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளை இணைந்து நடத்தத் தயாராகும் நிலையில், கூடுதலாக உருவாகக்கூடிய தேவையை கனடாவின் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்தில் உள்ள சுகாதார அமைப்பு மேற்கொண்டு ஏற்படும் அவசர மருத்துவ சுகாதார தேவகைளைச் சமாளிக்க முடியுமா என்ற கரிசனையும் எழுந்துள்ளது.
திங்கட்கிழமை கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் (CMAJ) வெளியிட்ட ஆசிரியர் கட்டுரையில், டாக்டர் கெத்தரின் வார்னர், கனடாவின் சுகாதார அமைப்பு ஏற்கனவே ‘தொடர்ச்சியான அதிகபட்ச சுமை நிலையில்’ இயங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதனுடன் ஆயிரம் பார்வையாளர்கள் சேர்த்தால்,அது பெரும் இக்கட்டுள்குள் எம்மைத் தள்ளும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“தற்போது காய்ச்சல் பருவத்தின் நடுவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவராகப் பேசுகிறேன். கனடாவின் எந்தப் பகுதிகளிலும் திடீர் தீவிர சிகிச்சை தேவையின் உயர்வை நாங்கள் சரியாக கையாள முடியாத நிலைதான் உள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் மருத்துவமனை வளங்களுக்கான தேவையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டால், அது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது,” என்று CMAJ-இன் துணை ஆசிரியரும் டொரோண்டோ நகர மையத்தில் பணியாற்றும் அவசர சிகிச்சை மருத்துவருமான வார்னர், CBC News-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அவருடைய இந்தக் கவலைக்கு, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் ஆதாரமாக உள்ளன. தொற்றுநோய் பரவல்கள், உணவால் ஏற்படும் நோய்கள், மதுபானத்தின் அதிகப்படியான பயன்பாடு போன்ற சுகாதார பிரச்சினைகள், பெருந்திரள் கூடுகைகள் நடைபெறும் காலத்திலும் அதன் பின்னரும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த ஆய்வுகள் காட்டுகின்றன.
உதாரணமாக, 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற காலத்தில் வான்கூவருக்கு கொண்டு வரப்பட்ட சின்னம்மை நோயின் ஒரு வகை, அந்த நிகழ்வுக்குப் பிறகு மூன்று மாதங்களில் 82 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு பரவலாக மாறியதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.