ஹமில்டனில் (Hamilton) உள்ள ஒரே பாதுகாப்பு வலயப் பகுதியில் (conservation area) புதன்கிழமை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில், ஏழு வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதுடன், காயக் (kayak) ரக படகோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹைவே 56 மற்றும் கிர்க் வீதிக்கு (Highway 56 and Kirk Road) அருகில் அமைந்துள்ள பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில் (Binbrook Conservation Area) இச்சிறுமி காணாமல் போயுள்ளார்.
அவரை மீட்பதற்கான தேடுதல் பணிகள் ஹமில்டன் பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே, அதே பகுதியில் காயக் படகு கவிழ்ந்ததாக அவசர உதவிக் குழுவினருக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நீரிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமி அல்லது உயிரிழந்த நபர் குறித்த எவ்வித விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.