நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரித்து வரும் வெப்பநிலையால் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுவர்களின் மென்மையான தோல் காரணமாக வெப்பப் படைகள் (Heat rashes), அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று (Fungal infections) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறைவதால் தூக்கமின்மை, அதிக சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வெயிலில் நீண்ட நேரம் விளையாடுவதால் வெப்ப மயக்கம் (Heat exhaustion) அல்லது வெப்பத்தாக்கம் (Heatstroke) ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புச் சத்துக்கள் குறையக்கூடும்.
இது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் போதியளவு நீர் மற்றும் இயற்கை பானங்களை அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். நண்பகல் வேளையில் சிறுவர்களை நேரடியாக வெயிலில் நடமாட விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தகுந்த கண்காணிப்பின் கீழ் சிறுவர்கள் நீரில் விளையாட அனுமதிப்பது அவர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும் விளையாட்டுப் போட்டிகளின் போது மாணவர்களுக்கு போதிய ஓய்வு மற்றும் நீர் அருந்துவதற்கான இடைவேளைகளை வழங்க வேண்டும்.